

சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே வின்ஸ்டார் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மூலம் ரியல் எஸ்டேட் ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆம்லா நெல்லிச்சாறு விற்பனை நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
வின்ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் குறிப்பாக தங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.10 லட்சம் என ஓராண்டில் இரட்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதனை நம்பிய சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு பகுதியைச் சேர்ந்த பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர். கால அவகாசம் முடிந்ததும் வாடிக்கையாளர்கள் பணத்தை வட்டியுடன் திருப்பி கேட்டனர்.
அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தற்போது பணம் இல்லை என்றும், பணம் வந்ததும் தருகிறேன் என்றும் கூறி வந்தார். ஆனாலும் பல மாதம் ஆகியும் பணம் திரும்ப கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள் வின்ஸ்டார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு குவிந்த வாடிக்கையாளர்கள் நிறுவனத்தில் உள்ளிருப்பு மற்றும் முற்றுகை போராட் டத்திலும் ஈடுபட்டனர். அப்போது வாடிக்கையாளர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கடை ஊழியர் ஒருவரும், வாடிக்கையாளர்கள் 2 பேரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர்.
சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் சார்பில் பள்ளப்பட்டி போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே சேலத்தில் உள்ள தனது நிறுவனத்திற்கு வராத சிவக்குமார் எங்கு இருக்கிறார் என்பது கடந்த சில நாட்களாக மர்மமாக இருந்தது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் படமுடிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரபாகரன் (வயது 24) என்பவரிடம் சிவக்குமார் நெல்லிச்சாறு வாங்கி விட்டு ரூ.1 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரத்து 726-ஐ கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபாகரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தன்னிடம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிவக்குமார், ஆம்லா நெல்லிச்சாறு வாங்கிய வகையில் ரூ.1 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரத்து 726-ஐ பாக்கி வைத்திருப்பதாகவும், இதுகுறித்து பல முறை அவரிடம் கேட்டும் தராததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி இருந்தார்.
இதையடுத்து மநாகர குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வேலன், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் தலைமறைவாக இருந்த வின்ஸ்டார் இந்தியா நிறுவன உரிமையாளர் சிவகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சிவக்குமார், பிரபாகரனுக்கு பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிவக்குமாரை போலீசார் இன்று மதியம் கைது செய்தனர். அப்போது அவர் கண்கலங்கிய நிலையில் அங்கு நின்றார். இந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தகவல் காட்டுத்தீ போல் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் பரவியது. இதனையறிந்த வின்ஸ்டார் இந்தியா நிறுவனத்தில் பல கோடி முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மேலும், அவர்கள் அடுத்து என்ன செய்வது? யாரிடம் முறையிடுவது? மோசடி தொடர்பாக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரலாமா? அல்லது போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாமா? கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாமா? என்பதும குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் சேலத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.