எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி: மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றதும், பா.ஜ.க. எம்.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையும் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதால் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது.
பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் நடந்த என்கவுன்டர் கொலைகளைக் கண்டித்து சமாஜ்வாடி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அவையின் மையப்பகுதியில் அவர்கள் ஒன்று திரண்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் டெல்லியில் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை கண்டித்து ஆம் ஆத்மி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். ஆந்திர எம்.பி. ராமச்சந்திர ராவ், ஆந்திராவுக்கு நீதி வேண்டும் என்று பேனரை ஏந்தி நின்றார்.
இதுபோன்ற சூழ்நிலைகளால் கடும் அதிருப்தி அடைந்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
‘அவை சுமூகமாக நடப்பதை நீங்கள் விரும்பவில்லை. கேள்வி நேரத்தையும் விரும்பவில்லை. இதுபோன்று அவையை நடத்த நான் விரும்பவில்லை’ என்று கோபமாக கூறினார் அவைத்தலைவர். #Tamilnews

