குட்கா - பான் மசாலாவுக்கு ரூ.9 கோடி கலால் வரி - உற்பத்தியாளர் செலுத்தியது கண்டுபிடிப்பு

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலாவுக்கு ரூ.9 கோடி கலால் வரியை உற்பத்தியாளர் செலுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குட்கா - பான் மசாலாவுக்கு ரூ.9 கோடி கலால் வரி - உற்பத்தியாளர் செலுத்தியது கண்டுபிடிப்பு
Published on

சென்னை:

தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்குன்றம் அருகே உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அந்த குடோனில் சோதனை நடத்திய வருமான வரிதுறையினர், அங்கிருந்து டைரி ஒன்றையும் கைப்பற்றினர். அதில் போதை பொருள் விற்பனைக்காக யார்- யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் அடங்கி இருந்தது.

அதில் போலீஸ் அதிகாரிகள் பெயர் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உதவி கமி‌ஷனர் முதல் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை பலரது பெயர் அதில் இடம் பெற்றிருந்தது. சுமார் 30 அதிகாரிகளின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருமான வரி துறையினர் தலைமை செயலாளருக்கு நோட்டீசு அனுப்பினர். அதில் குட்கா விற்பனைக்கு அமைச்சர் ஒருவர் லஞ்சம் பெற்ற விவரமும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அதுபோன்று ஆவணம் மாயமாகி விட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

இதுபற்றி விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனியாக ஆணையர் ஒருவரை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக தடை செய்யப்பட்ட குட்கா-பான் மசாலா பொருட்களை உற்பத்தி செய்த ஒருவரிடமிருந்து ரூ.9 கோடி கலால் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த உற்பத்தியாளர் மீது ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து அந்த குட்கா உற்பத்தியாளர் தாமாகவே முன்வந்து கலால் வரியை செலுத்தி உள்ளார். இது தொடர்பாக மேல் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இந்த விசாரணை முடிந்த பின்னரே, அந்த உற்பத்தியாளர் இறுதியாக செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்பது முடிவு செய்யப்படும்.

இதற்கிடையே குட்கா விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து மத்திய உற்பத்தி வரிதுறை அதிகாரிகள் பலரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருப்பது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக பலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பலர் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக குட்கா விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குட்கா உற்பத்தியாளரிடமிருந்து சுங்கம்-உற்பத்தி ஊழல் கண்காணிப்பு துறையினரே, ரூ.9 கோடி கலால் வரியை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com