அரசு வேலை வாங்கி தருவதாக கூறி காங்கிரஸ் பிரமுகரிடம் ரூ.8 லட்சம் மோசடி

விழுப்புரம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி காங்கிரஸ் பிரமுகரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி காங்கிரஸ் பிரமுகரிடம் ரூ.8 லட்சம் மோசடி
Published on

விழுப்புரம்:

செஞ்சி அருகே உள்ள பெரியகரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63), காங்கிரஸ் பிரமுகர். இவருடைய மகன் சக்திவேல் (25). இவர் பி.இ. மெக்கானிக்கல் முடித்துள்ளார். சண்முகத்திற்கும் செஞ்சி- திருவண்ணாமலை சாலை புதுத்தெருவை சேர்ந்த அரங்ககாந்தி (53) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அரங்ககாந்தி, டெல்லியில் தனக்கு அரசு அதிகாரிகள் சிலரை நன்கு தெரியும், அவர்கள் மூலமாக சக்திவேலுக்கு மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக சண்முகத்திடம் கூறியுள்ளார்.

இதை நம்பிய சண்முகம், அரங்ககாந்தியிடம் எப்படியாவது தனது மகனுக்கு மத்திய அரசு பணி வாங்கித்தரும்படி கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்று கூறிய அரங்ககாந்தி, சண்முகத்திடம் இருந்து ரூ.8 லட்சத்து 16 ஆயிரத்தை பெற்றார்.

பின்னர் சில மாதங்கள் கழித்து வேலைக்கான உத்தரவு வந்துவிட்டதாக கூறி பல்வேறு ஆவணங்களை சண்முகத்திடம் அரங்ககாந்தி கொடுத்துள்ளார். அந்த ஆவணங்களை கொண்டு வேலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சண்முகம், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அரங்ககாந்தியை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று செஞ்சியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற அரங்ககாந்தியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். # tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com