ரூ.50 லட்சம் பண மோசடி வழக்கு: நத்தம் விஸ்வநாதன் மீது புகார் அளித்தவர் போலீசில் ஆஜர்

ரூ.50 லட்சம் பண மோசடி வழக்கில் நத்தம் விஸ்வநாதன் மீது புகார் அளித்தவர் போலீசில் ஆஜராகி செல்போன் உரையாடல் ஆதாரத்தை கொடுத்ததாக தெரிகிறது.
ரூ.50 லட்சம் பண மோசடி வழக்கு: நத்தம் விஸ்வநாதன் மீது புகார் அளித்தவர் போலீசில் ஆஜர்
Published on

திருச்சி:

திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் லோகநாதன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 2015-ம் ஆண்டு நெல்லையை சேர்ந்த காமராஜ், தன்னை அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு நெருக்கமானவர் என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டு, இலுப்பூர் பகுதியில் சூரிய மின் தகடு மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்க 200 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்டார்.

இதற்காக லோகநாதன் அந்தப்பகுதியில் உள்ள தனது 50 ஏக்கர் நிலத்துடன் அதனை சுற்றியுள்ள 150 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களிடம் பேசி நிலப்பத்திரங்களை வாங்கி காமராஜிடம் கொடுத்தார். இதற்காக ரூ.1½ கோடி தருவதாக கூறிய காமராஜ், ரூ.20 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இது குறித்து லோகநாதன் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு முரளிதரகண்ணன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், காமராஜ் உள்பட சிலர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் நத்தம் விசுவநாதன், காமராஜ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், புகார்தாரரான லோகநாதனிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து லோகநாதன் 2 வக்கீல்களுடன் நேற்று கே.கே.நகர் போலீசில் ஆஜரானார். அவரிடம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் 2½ மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அப்போது லோகநாதன், காமராஜிடம் தொடர்பு கொண்டதற்கான ஆதாரமாக செல்போன் உரையாடல்கள், செல்போன் எண்கள் பட்டியல், மிரட்டல் எஸ்.எம்.எஸ்.கள், வீட்டிற்கு வந்த ஆசாமிகள் தொடர்பான சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் உள்ளிட்டவைகளை வழங்கியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com