டாஸ்மாக் கடையில் கொள்ளை போனதாக நாடகமாடி ரூ.5¼ லட்சத்தை திருடிய ஊழியர்கள் கைது

மணப்பாறை அருகே டாஸ்மாக் கடையில் ரூ.5¼ லட்சம் கொள்ளை போனதாக நாடகமாடிய ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகின்றது. நேற்று முன்தினம் பணியில் கரும்புளிப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 50), பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிவாசகம்(43) ஆகிய இருவரும் விற்பனையாளராக இருந்தனர். நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் மேட்டுக்கடை டாஸ்மாக் கடையில் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

விற்பனை நேரம் முடிந்ததும் விற்பனையாளர்கள் கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இந்தநிலையில் கடை மூடப்பட்ட சிறிது நேரத்தில், கடையின் இரு பூட்டுகளும் திறந்து இருப்பதை அங்கிருந்த காவலாளி சுப்பிரமணி பார்த்தார். உடனே அவர் விடுமுறையில் இருந்த விற்பனையாளர் தங்கவேலுக்கு தகவல் கொடுத்தார்.

அவர், பணியில் இருந்தவர்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் அவர்கள், கடைக்கு வந்து பார்த்த போது, கடையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சத்து 39 ஆயிரத்து 440 கொள்ளை போனதாக தெரிவித்தனர். இதுபற்றி கடையின் மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, லாக்கர் உடைக்கப்படாமல் திறந்ததுடன், கடை மூடப்பட்ட சிறிது நேரத்தில் பணம் கொள்ளை போன தகவல் வந்ததால் கடை ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து விற்பனையாளர்கள் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையை பூட்டிச் சென்ற பின் இரண்டாவது முறையாக குறுந்தகவல் அனுப்பவில்லை என்று கூறி இருவரும் வந்து மீண்டும் கடையை திறந்ததும், பின்னர் பணத்தை திருடி வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டு, கொள்ளை போனதாக நாடகம் ஆடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை போலீசார், மாரியப்பன், மணிவாசகம் ஆகியோரை கைது செய்ததுடன், மணிவாசத்தின் வீட்டில் இருந்த ரூ.5 லட்சத்து 39 ஆயிரத்து 440 போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com