

ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வெளிநாட்டு தபால் நிலையத்துக்கு வரும் பார்சலில் பெரும் அளவில் போதை பொருள் வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்போது நெதர்லாந்தில் இருந்து வந்த பார்சல் ஒன்று சந்தேகப்படும்படியாக இருப்பதை கண்டனர்.
அதில் திருமண ஆவணங்கள் இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் திருமண ஆவணங்களுக்கு பதிலாக நீல நிற மாத்திரைகள் இருந்தன. அந்த மாத்திரைகளை பரிசோதனைக்கு அனுப்பினர்.
அதில், அந்த மாத்திரைகள் ‘புளு பனிஷோர்’ என்ற ஒரு வகையான போதை மாத்திரைகள் என்பது தெரியவந்தது. ரூ.30 லட்சம் மதிப்புள்ள 384 கிராம் எடைகொண்ட போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர்.
அதில் அந்த தபால், மைசூரில் உள்ள ஒரு அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ரிஷிகேஷ் (வயது 23) என்பவருக்கு வந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர் ரிஷிகேசை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில் மைசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் நடந்துவரும் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இளைஞர்கள் இதுபோன்ற போதை மாத்திரைகளை அதிகம் விரும்புவதாகவும், மற்ற போதை பொருட்களைவிட இதுபோன்ற போதை மாத்திரைகள் அதிகநேரம் நீடிப்பதாகவும் சுங்க இலாகா அதிகாரிகளிடம் ரிஷிகேஷ் தெரிவித்தார்.
இந்த ‘புளு பனிஷோர்’ போதை மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு இங்கிலாந்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.