டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 2½ லட்சம் பேருக்கு தலா ரூ.2000 அபராதம்

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 2½ லட்சம் பேருக்கு தலா ரூ.2000 வரை அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகராட்சி ஆணையர்
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது.

பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்குவை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

வீடு மற்றும் கடை, சாலையோரங்களில் தண்ணீர் தேங்கும்படி வாகன டயர்கள், பழைய பொருட்களை வீச கூடாது. அவற்றை அகற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே டெங்கு கொசுக்களை உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறங்களை வைத்து இருந்தால் அபராதம் மற்றும் கைது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தி கடை மற்றும் வீடுகளில் பழைய பொருட்கள், டயர், இரும்புகளை அகற்றினர்.

சென்னையிலும் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டனர். வீடு, கடை, தனியார் கட்டிடங்கள் ஆகியவற்றில் சோதனை செய்து பழைய டயர்கள், தண்ணீர் பாட்டில்கள், குப்பைகளை அகற்றினர்.

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். சுற்றுப்புறங்களை தூய்மாக வைத்து இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

சென்னை புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் பழைய பொருட்கள், கழிவுகள் ஆங்காங்கே சேர்த்து வைக்கப்படுவதால் அதில் இருந்து டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாவதை தடுக்க சுகாதாரத்துறையும், சென்னை மாநகராட்சியும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

கடை மற்றும் வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ளாதவர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் புதுப்பேட்டையில் நடந்த கொசு ஒழிப்பு நடவடிக்கையின் போது 1737 பேருக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் நேரடி மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வீடு வீடாகவும், கடை, கடையாகவும் அதிகாரிகள் சென்று டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

சுகாதார பணியாளர்கள் 20 பேர் கொண்ட 6 குழுக்கள் அந்த பகுதி முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். 60 கொசு ஒழிப்பு எந்திரம் மூலம் புகை அடிக்கப்பட்டது.

கடைகள், வீடுகளில் இருந்து பழைய பொருட்கள், கழிவுகளை அகற்றாதவர்கள் மீது அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

நோட்டீஸ் கொடுத்தும் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருந்த வீடு, கடை உரிமையாளர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது. ரூ.2000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதத் தொகையை மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-

டெங்கு கொசுக்கள் உபயோகமற்ற பிளாஸ்டிக், இரும்பு கழிவு பொருட்களில் இருந்து அதிகளவு உருவாகிறது. அதனால் அவற்றை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

எச்சரிக்கை நோட்டீசும் வினியோகித்தும் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரையில் 2½ லட்சம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அபராத தொகையாக ரூ.12½ லட்சமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்குள் பழைய பொருட்களின் கழிவுகளை அகற்றவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது மக்களை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதே நேரத்தில் டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை கமி‌ஷனர் விஜயலட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com