பாளை அருகே கோவிலை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகள் கொள்ளை

பாளை அருகே கோவிலை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளை அருகே கோவிலை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகள் கொள்ளை
Published on

நெல்லை:

பாளை அருகே உள்ள சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுக்கரையோரம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகர் சுந்தர்ராஜபெருமாள் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக கண்ணன் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் கண்ணன் கோவிலை பூட்டி சென்றார்.

இதையடுத்து நள்ளிரவு அங்கு வந்த கொள்ளையர்கள் கோவிலின் பக்கவாட்டு சுவர்மேல் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு சி.சி.டி.வி. கேமரா இருந்ததை பார்த்த கொள்ளையர்கள் முகத்தை துணியால் மூடியபடி அந்த கேமராவை உடைத்தனர். பின்னர் கோவிலின் கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே சென்றனர். ஆனால் கோவிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த கேமராவை அவர்கள் கவனிக்கவில்லை.

இதனால் கொள்ளை சம்பவங்கள் அதில் பதிவாகி இருந்தது. பின்னர் உள்ளே சென்ற கொள்ளையர்கள் மூலவர் சிலை அருகே 1½ அடி உயரம் உள்ள ஐம்பொன்னால் ஆன லெட்சுமி தேவி, பூமா தேவி, சுந்தர்ராஜ பெருமாள் சிலைகளையும், அருகே வெண்கலத்தால் ஆன சவுந்தர வள்ளி அம்மன் மற்றும் ஆண்டாள் சிலைகளையும், பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியர் பயன்படுத்திய சங்கு, கோவில் உண்டியல் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் கோவில் பூசாரி கண்ணன் வந்தார். அப்போது கோவில் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஐம்பொன் சிலைகள் உள்ளிட்டவை கொள்ளை போனது குறித்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி மகேந்திரனுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் பொன்னரசு, இன்ஸ்பெக்டர் அருண் பிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை கொண்டும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டு அது சிறிது தூரம் சென்று தாமிரபரணி கரையோரம் நின்றது. கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ‘இதே போல் கடந்த 1980-ம் ஆண்டும் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. ஆனால் அது கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே போலீசார் விசாரணை நடத்தி தற்போது கொள்ளை போன ஐம்பொன் சிலைகளை மீட்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com