

சமயபுரம்:
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாதம் இரு முறை உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்படும். இந்தநிலையில் கொரோனா காரணமாக கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டன. இதனால் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணியும் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. இந்த பணி கோவில் இணை ஆணையர் அசோக்குமார், திருச்சி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ் செல்வி, செயல் அலுவலர்கள் விஜயராகவன், கார்த்திகா, முத்துராஜ், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
முன்னதாக காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோவில் பணியாளர்கள், ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தமாக கழுவிய பின்னர் சமூக இடைவெளி விட்டு உட்கார்ந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.18 லட்சத்து 95 ஆயிரத்து 597 காணிக்கையாக வசூல் ஆனது. மேலும் 384 கிராம் தங்கம், 510 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணமும் கிடைத்தது.