கொடநாடு பங்களாவில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கொள்ளை?

கொடநாடு பங்களாவில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இதன் பின்னணியில் வி.ஐ.பி.க்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக சயனிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொடநாடு பங்களாவில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கொள்ளை?
Published on

கோவை:

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை-கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சயன் விபத்தில் படுகாயமடைந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் சிகிச்சை பெற்று வரும் தீவிர சிகிச்சை பிரிவு முன்பு நீலகிரி போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சயனின் உடல் நிலை அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும் அவரிடம் விசாரணை நடத்தும் அளவுக்கு உடல் நிலை தேறவில்லை என கூறி போலீஸ் விசாரணைக்கு டாக்டர்கள் அனுமதிக்கவில்லை.

பாலக்காட்டில் விபத்தில் சிக்கி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போதே சயனிடம் கேரள போலீசார் விசாரித்துள்ளனர். மேலும் கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட உடன் அவரிடம் மாஜிஸ்திரேட் செல்வகுமார் வாக்குமூலம் பெற்றார்.

கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்த கைக்கடிகாரங்கள், அலங்கார பொருட்களை மட்டும் கொள்ளையடித்து சென்றதாகவும், அவை மீட்கப்பட்டு விட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால் பங்களாவுக்குள் இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இச்சம்பவத்தின் பின்னணியில் வி.ஐ.பி.க்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜிக்கும், சயனுக்கும் தான் உண்மையிலேயே பங்களாவில் இருந்து கொள்ளையடித்தது என்னென்ன? என்பது தெரியும் என போலீசார் கருதுகின்றனர். கனகராஜ் இறந்து விட்டதால் இதுதொடர்பாக சயனிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சயன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரிடம் இன்று நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா நேரில் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com