ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

ரெயில்வே துறையில் டி.டி.ஆர். வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் வரை மோசடி செய்த 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் அருகேயுள்ள பல்லவநாயக்கன்பட்டி கிராமம் பிச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிக்கவுண்டர். இவரது மகன் மாதையன். பிச்சாம்பாளையம் அருகேயுள்ள மலையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் மாதையன் மகனுக்கு ரெயில்வே துறையில் டி.டி.ஆர். வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதை நம்பி மாதையன் பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்தை பழனிவேலிடம் தந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக ஆகியும் பழனிவேல் வேலை வாங்கித் தரவில்லை. இந்நிலையில் கடந்த 10.2.2019-ந் தேதி காலையில் மாதையன் பழனிவேல் வீட்டுக்குச் சென்றார். அப்போது மாதையன், பழனிவேலிடம் 2 வருடங்கள் ஆகியும் வேலை வாங்கித்தரவில்லை. எனவே வேலை வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் பழனிவேல், அவரது மகன் அருண், மனைவி ராஜாத்தி, பழனிவேலின் தம்பி ராமசாமி ஆகியோர் மாதையனை கை மற்றும் மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து தனது மகனுக்கு வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சத்தை பெற்றுக்கொண்டு 2 வருடங்கள் ஆகியும் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, பழனிவேல் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மாதையன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் ராசிபுரம் போலீசார் மாதையனிடம் ரூ.10 லட்சத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக பழனிவேல், அவரது மனைவி ராஜாத்தி, மகன் அருண், பழனிவேலின் தம்பி ராமசாமி ஆகிய 4 பேர் மீதும் மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கு உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ராசிபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com