

சென்னை:
ராயப்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் நேற்று காலை மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.
மதியம் இருவரும் வீடு திரும்பினர். கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ 2 ஆயிரம் பணம் காணாமல் போயிருந்தது. வீட்டின் பூட்டை உடைக்காமல் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது அறிந்து கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ளச்சாவியை போட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. எனவே தெரிந்த நபர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அவர்கள் யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.