மதுரையில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி - மைத்துனர் கைது

மதுரையில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி முத்துஇருளாண்டியின் மனைவி முத்துலட்சுமி, அவரது தம்பி ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி - மைத்துனர் கைது
Published on

மதுரை:

மதுரை காமராஜர்புரம் பகுதியில் அ.தி.மு.க. பிரமுகர் ராஜபாண்டிக்கும், தி.மு.க. பிரமுகர் வி.கே. குருசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இருதரப்பிலும் அடுத்தடுத்து படுகொலைகள் நடந்தன.

இந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த ரவுடிகள் முத்து இருளாண்டி என்ற மந்திரி (வயது30), சகுனி கார்த்திக் (28) ஆகிய 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தனர்.

இவர்கள் இருவரும் அலங்காநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக மதுரை நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்லூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

செல்போன் டவர் மூலம் ரவுடிகள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்தபோது அவர்கள் 2 பேரும் மதுரையை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.

அங்குள்ள மந்தையம்மன் கோவில் தெற்கு தெருவில் உள்ள மாயக்கண்ணன் (25) என்பவரது வீட்டில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகிய 2 பேரும் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் சாதாரண உடையில் வீட்டுக்குள் புகுந்தனர்.

போலீசாரை கண்டதும் 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் போலீசை நோக்கி சுட்டனர். அப்போது போலீஸ்காரர் பாலமுருகனுக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி சப்-இன்ஸ்பெக்டர் முருகன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் திருப்பி சுட்டதில் ரவுடிகள் 2 பேரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மதுரைநகர துணை கமி‌ஷனர் சசிமோகன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசா ரணை நடத்தினர்.

ரவுடிகள் பதுங்கி இருந்த வீட்டில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

சம்பவத்தின்போது வீட்டில் பதுங்கி இருந்த மாயக்கண்ணன், முனியசாமி, குட்டிபாலா ஆகிய 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

குண்டு பாய்ந்து பலியான ரவுடிகள் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடிகள் முத்துஇருளாண்டி, சகுனி கார்த்திக் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் போட்டி காரணமாக வி.கே.குருசாமி தரப்புக்கும், ராஜபாண்டி தரப்புக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளது.

2 பேருமே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள். வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த இவர்கள் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஆரம்பத்தில் மோதிக்கொண்டாலும் பின்னர் இருதரப்பிலும் பழிக்குப்பழியாக படுகொலைகள் அரங்கேற்றப்பட்டது மதுரை மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியது.

வி.கே.குருசாமி, ராஜபாண்டி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். கடந்த 2015-ம் ஆண்டு வி.கே.குருசாமியின் உறவினர் பாம்பு பாண்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக சகுனி கார்த்திக்கின் மாமா மயில்முருகன் கொல்லப்பட்டார்.

ஆத்திரம் அடைந்த சகுனி கார்த்திக் குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை கொலை செய்தார். இதற்கு பழிக்குப்பழியாக ராஜ பாண்டி மகன் முனியசாமி எரித்துக்கொல்லப்பட்டார். அடுத்து குருசாமி தரப்பை சேர்ந்த சடையாண்டியை கொலை செய்தனர்.

பழிக்குப்பழி கொலை சம்பவங்களில் தலைமறைவாக இருந்த முத்துஇருளாண்டியும், சகுனி கார்த்திக்கும் கடந்த மாதம் கோவையில் இருந்து மதுரை வந்துள்ளனர்.

மதுரையில் பதுங்கி இருந்து வி.கே.குருசாமியை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேடுதல் வேட்டை நடத்தியபோது போலீசாரை சுட்ட ரவுடிகள் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

துப்பாக்கி சூடு நடந்த வீட்டில் இருந்து தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். சிக்கந்தர்சாவடி, காமராஜர்புரம் ஆகிய பகுதிகளில் தேடினர். அப்போது சுடப்பட்ட மனைவி முத்துஇருளாண்டி மனைவி முத்துலட்சுமி, முத்துலட்சுமியின் தம்பி ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சுடப்பட்ட ரவுடிகள் குறித்து தெப்பக்குளம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தப்பி ஓடிய மாயக்கண்ணன் சென்னை அயனாவரத்தை சேர்ந்தவன். அவன் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. மாயக்கண்ணன் உள்ளிட்ட 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள் மீது அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருத்தல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரவுடிகள் கொலை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் தேசிய மனித உரிமை கமி‌ஷன் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

மதுரையில் கடந்த 2010-ம் ஆண்டு தெப்பக்குளம் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் கவியரசு, கல்மண்டையன் முருகன் ஆகியோரை உதவி கமி‌ஷனர் வெள்ளத்துரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கொலை வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மதுரையில் தலைமறைவாக உள்ள ரவுடிகளுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

போலீசார் தொடர்ந்து ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com