வில்லிவாக்கத்தில் ரூ.30 லட்சம் கேட்டு தொழில் அதிபரை கடத்திய ரவுடி கும்பல்

வில்லிவாக்கத்தில் நள்ளிரவு சினிமா பாணியில் தொழில் அதிபரை ரவுடி கும்பல் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ்
முகேஷ்
Published on

போரூர்:

சென்னை அயப்பாக்கம் பச்சையப்பன் நகர் பேஸ் -1 பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். தொழில் அதிபர்.

“எம்.எம் லாஜிஸ்டிக்ஸ்” என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னையில் 4 கிளைகள் உள்ளன.

திருச்சியில் இருந்து லாரி மூலம் வரும் பொருட்களை பார்வையிட நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் முகேஷ் வில்லிவாக்கம் ஐ.சி.எப் சாலையில் உள்ள அலுவலகத்திற்கு காரில் சென்றார். அங்கு சாலையோரம் காரை நிறுத்திவிட்டு காரில் அமர்ந்து இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் “உங்களிடம் பேச வேண்டும்” என்று கூறி முகேஷ் காரில் ஏறிக் கொண்டனர்.

திடீரென அவர்கள் முகேஷின் விலை உயர்ந்த 2 செல்போன்களை பறித்துக் கொண்டனர். முகேஷை காரின் பின் இருக்கையில் அமர வைத்து கடத்தி சென்றனர்.

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது கடத்தல் கும்பலில் இருந்த ஒருவன் “ நான் பிரபல ரவுடி தில்பாண்டி” எனக்கு உடனடியாக ரூ.30லட்சம் பணம் வேண்டும். இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினான். அதிர்ச்சி அடைந்த முகேஷ், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல் கும்பல் பீர் பாட்டிலால் முகேஷை சரமாரியாக தாக்கினர்.

மதுரவாயல் அருகே கார் சென்ற போது பின்பக்க கதவை நைசாக திறந்த முகேஷ் காரில் இருந்து குதித்து சாலையில் தப்பி ஓடினார்.

அவரை கடத்தல் கும்பல் விரட்டி சென்றது. அருகில் போலீஸ் நிலையம் இருப்பதை கண்டதும் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய முகேஷ் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் ரவுடி கும்பலால் கடத்தி தாக்கப்பட்டது பற்றி கூறினார்.

இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் முகேஷ் காரின் பதிவு எண் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தப்பி சென்ற ரவுடி ‘தில்பாண்டி’ அவனது கூட்டாளிகளை தேடிவருகின்றனர்.

நள்ளிரவு சினிமா பாணியில் தொழில் அதிபரை ரவுடி கும்பல் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com