திருச்சியில் ரவுடிகளை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை

திருச்சியில் ரோட்டில் சண்டைபோட்டு கொண்டிருந்த ரவுடிகளை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

திருச்சி:

திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 48). இவர் சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒருலேத் பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு பொன்மொழி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். காமராஜ் வேலைக்கு தினமும் காஜாப்பேட்டை வழியாக நடந்து செல்வார்.

நேற்று முன்தினம் (6-ந்தேதி) காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். காஜாப்பேட்டை அண்ணா நகர் பகுதியில் ஒரு கறிக்கடை அருகே சென்றபோது 2 பேர் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதை பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்தனர்.

அப்போது காமராஜ் மட்டும் ரோட்டில் சண்டை போட்டவர்களை பார்த்து ஏண்டா உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? என்று கூறி தட்டிக்கேட்டார். இதனால் சண்டை போட்டு கொண்டிருந்த 2 பேரும் காமராஜ் மீது ஆத்திரம் அடைந்தனர்.

அவர்கள் திடீரென காமராஜை சரமாரியாக தாக்கினர். அப்போது ஒருவர் காமராஜின் தலையில் செங்கல்லால் தாக்கினார். இதில் காமராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவர் ரத்தம் வழியும் தலையுடன் அருகில் இருந்த பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு நடந்தே சென்று புகார் கூறினார்.

உடனே அவர் ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்த போலீசார் அவசர, அவசரமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் காமராஜ் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பாலக்கரை இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் காமராஜை தாக்கி கொலை செய்தது, திருச்சி காஜாப்பேட்டையை சேர்ந்த விமல்ராஜ் (21) மற்றும் கீழப்புதூரை சேர்ந்த விஜய்பாபு என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ரவுடிகளான இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

காமராஜை தாக்கும் போது அவர்கள் இருவரும் போதையில் இருந்துள்ளனர். பாலக்கரை காஜாபேட்டை பகுதியில் கஞ்சா, மாத்திரை போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதும் அதை பயன்படுத்தும் நபர்கள் அடிதடி, வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு வருவதும் நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தும் மீண்டும், மீண்டும் கொலைகள், அடிதடிகள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com