

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் ‘புல்லட்‘ நாகராஜன் (வயது 53). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ் அப்‘பில் ஆடியோ வெளியிட்டு இருந்தார்.
மேலும், பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் போலீசாரை விமர்சித்தும் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் பெரியகுளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நாகராஜன் கடந்த 10-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவர் இடுப்பில் வைத்திருந்த 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த பையில் துப்பாக்கிகள், பத்திரிகையாளர், வக்கீல் பெயரில் போலி அடையாள அட்டைகள், நீதிபதியின் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப், சார்பு நீதிபதி என்ற வாசகத்துடன் கூடிய அட்டை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.