என்கவுண்டருக்கு பயந்து போலீசில் சரணடைந்த ரவுடி பினு

போலீஸ் அதிகாரி முன்பு இன்று சரண் அடைந்த ரவுடி பினு போலீஸ் என்கவுண்டருக்கு பயந்தே சரண் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்கவுண்டருக்கு பயந்து போலீசில் சரணடைந்த ரவுடி பினு
Published on

சென்னை:

மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் சூளைமேட்டை சேர்ந்த ரவுடி பினு தனது கூட்டாளிகள் 100 பேருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரண்டிருந்த 75 ரவுடிகளை மடக்கி பிடித்தனர். போலீஸ் பிடியில் இருந்து ரவுடி பினு, கூட்டாளிகள் சிலருடன் தப்பி ஓடிவிட்டான். கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த பினுவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

போலீஸ் பிடியில் சிக்காமல் உடனடியாக சென்னையை விட்டு தப்பிய பினு வெளிமாவட்டங்களில் பதுங்கி இருந்தான். சொகுசு கார்களில் கூட்டாளிகளுடன் பினு சுற்றி வந்தான்.

தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்த பினு, நண்பர்கள், உறவினர்கள் யாரையும் போனில் தொடர்பு கொண்டு பேசாமலேயே இருந்தான். இதனால் பினுவை பிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே இருந்து வந்தது.

அவனது சொந்த ஊரான கேரளாவில் சென்று போலீசார் விசாரித்தனர். ஆனால் அவன் அங்கும் செல்லவில்லை.

இந்த நிலையில் ரவுடி பினு இன்று திடீரென சரண் அடைந்தான். அம்பத்தூர் துணை கமி‌ஷனர் சர்வேஸ் ராஜ் முன்பு ஆஜரான அவன், சரண் அடைவதாக தெரிவித்தான். இதுபற்றி போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பினுவை கைது செய்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பினு தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்க பட்டான்.

அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. இத்தனை நாட்கள் பதுங்கி இருந்தது எங்கே? அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? என்பது பற்றி பினுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் கூட்டாளிகளை ஒரே இடத்தில் திரட்டியதன் நோக்கம் என்ன? யாரை தீர்த்துக்கட்டுவதற்கு திட்டம் போடப்பட்டது? என்பது பற்றியும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் ரவுடிகளை திரட்டி பீதியை ஏற்படுத்திய பினு மற்றும் அவனது கூட்டாளிகள் ஆயுதங்களுடன் அனுமதியின்றி கூடியதாக மாங்காடு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பினுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க உள்ளனர். இதன் பின்னர் பினுவை காவலில் எடுத்தும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பினுவையும், தப்பி ஓடிய அவனது கூட்டாளிகளையும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து என் கவுண்டர் பீதியும் நிலவியது. இந்த நிலையில்தான் ரவுடி பினு இன்று போலீஸ் அதிகாரி முன்பு சரண் அடைந்துள்ளான். போலீஸ் என்கவுண்டருக்கு பயந்தே பினு சரண் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பினு மீது சூளைமேடு, வடபழனி, பூந்தமல்லி காவல் நிலையங்களில் 3 கொலை வழக்குகள் உள்ளன. இதில் சூளைமேடு கொலை வழக்கில் இருந்து பினு விடுதலையாகி விட்டான். மற்ற 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் பினுவுக்கு பிடிவராண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளிலும் பினு அடுத்தடுத்து கைது செய்யப்பட உள்ளார்.

சென்னையில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தப்பிச் சென்றுவிட்ட பினு, கரூரில் 2 ஆண்டுகளாக தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கரூரில் உள்ள பினுவின் நண்பர்கள் யார்- யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com