

போரூர்:
அயப்பாக்கம் பச்சையப்பன் நகரை சேர்ந்தவர் முகேஷ் (30). டிரான்ஸ் போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை நேற்று முன்தினம் இரவு பிரபல ரவுடி தில்பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் காரில் கடத்தி ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகே கார் வாகன நெரிசலில் சிக்கிய போது, கடத்தல் கும்பலிடம் இருந்து நைசாக தப்பியதாக கூறி இருந்தார்.
புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் ராதாகருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ரவுடி தில்பாண்டியின் கூட்டாளியான வில்லி வாக்கத்தைச் சேர்ந்த ஓம்பிரசாத் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது முகேஷ் கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.
முகேஷ், ரவுடி தில்பாண்டியின் நெருங்கிய நண்பராவார். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து மது அருந்தினர். பின்னர் ஓம்பிரசாத்தை காரை ஓட்ட சொல்லி முகேஷ், தில்பாண்டி இருவரும் காரில் பின் இருக்கையில் அமர்ந்து மது அருந்தி கொண்டே வந்தனர்.
மதுரவாயல் அருகே கார் வந்தபோது அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த முகேஷ், தில்பாண்டி இடையே தீடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது தில்பாண்டி முகேஷை தாக்கினார்.
உடனே காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய முகேஷ் போலீஸ் நிலையம் சென்று தன்னை தில்பாண்டி கடத்தி பணம் கேட்டு அடித்ததாக பொய் புகார் கொடுத்துள்ளார்.
முகேஷ் பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்துள்ளார். இவர் மீது செங்குன்றம், எழும்பூர் போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் வழக்குகள் உள்ளது.
ஓம்பிரசாத் மீது கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. முகேஷ், ஓம்பிரசாத் இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தில்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
தலைமறைவான தில்பாண்டி மீது கொலை ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.