ஓடும் பஸ்சில் டிக்கெட் பரிசோதகரை வெட்டிய ரவுடி கைது

ஓடும் பஸ்சில் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
ஓடும் பஸ்சில் டிக்கெட் பரிசோதகரை வெட்டிய ரவுடி கைது
Published on

புதுச்சேரி:

புதுவை சாமிபிள்ளை தோட்டம் அகத்தியர் தெருவை சேர்ந்தவர் தமிழ்வழி. தனியார் பஸ் டிக்கெட் பரிசோதகர்.

இவர் நேற்று காலாபட்டில் இருந்து புதுவை வரும் போது பஸ்சில் பயணம் செய்த தமிழ்வழியிடம் சிலர் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமிழ்வழியை வெட்டினார்கள். உடனே அவர் உயிர் பிழைக்க ஓடும் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் தூரத்தி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தமிழ்வழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழ்வழியை ஓடும் பஸ்சில் வெட்டியது முத்தியால்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ராஜ் என்ற புஷ்பராஜ் என்பதும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், கோட்டக்குப்பத்தை சேர்ந்த தென்னரசு என்பதும் தெரியவந்தது.

இதில் ராஜ் என்ற புஷ்பராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு அடி-தடி, கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com