

கரீபியன்:
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் சார்பாக வீரர்கள், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ரோஸ்டன் சேஸ் நான்கு விருதுகள் வென்று அசத்தினார். அவர் இந்த வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த உள்ளூர் (4 நாள் டெஸ்ட்) கிரிக்கெட் வீரர் மற்றும் வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர் ஆகிய பட்டங்களை வென்றார்.
சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஜேசன் கோல்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் விருதை அண்ட்ரே ரசல் வென்றார். சிறந்த உள்ளூர் வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் வீரராக அஸ்லே நர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெயின் பிராவோ, சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 19 வயதிற்குட்பட்டோருக்கான விருது ஜோஷ்வா பிஷப்பிற்கு வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை ஆகிய விருதுகளை ஸ்டெபனி டெய்லர் வென்றார். வாழ்நாள் சாதனையாளர் விருதை கிளிவ்லண்ட் டேவிட்சன் தட்டிச்சென்றார்.
சிறந்த உள்ளூர் அணியாக கயானா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான விருதையும் அந்த அணியே தட்டிச்சென்றது. கிறிஸ் கெயிலின் அறக்கட்டளைக்கும் விருது அளிக்கப்பட்டுள்ளது.