

நகரி:
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா. இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தில் நடிகை ரோஜா பங்கேற்றார். அப்போது அவர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதையடுத்து நடிகை ரோஜாவை சபாநாயகர் கோடல சிவப்பிரசாதராவ் 1 வருடம் சஸ்பெண்டு செய்தார். இந்த சஸ்பெண்டு உத்தரவை நீக்கக் கோரி நடிகை ரோஜா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ரோஜா சார்பில் வக்கீல் இந்திர ஜெய்சிங்கும், அரசு தரப்பில் வக்கீல் பிரேரனாசிங்கும் ஆஜராகி வாதாடினார்கள். இதையடுத்து நடிகை ரோஜாவிடம் தவறு செய்யவில்லை என்று விளக்கி கடிதம் ஒன்றை சபாநாயகரிடம் கொடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
அந்த கடிதத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி சபாநாயகரிடம் நடிகை ரோஜா வழங்கினார். நான் தவறு ஏதும் செய்யவில்லை என்று தனது தரப்பு நியாயத்தை நடிகை ரோஜா கடிதத்தில் விளக்கி கூறி இருந்தார். அதன் பிறகும் அவரது மீதான சஸ்பெண்டு நடவடிக்கை நீக்கப்பட வில்லை.
இது தொடர்பாக நடிகை ரோஜா தரப்பில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், “ரோஜா இதுவரை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கவில்லை” என்றார்.
இதையடுத்து ரோஜாவின் வக்கீலிடம் கடிதத்தின் நகலை அரசு தரப்பு வக்கீலிடம் கொடுக்குமாறு நீதிபதி கூறினார். அதன்படி ரோஜாவின் கடிதம் அரசு தரப்பு வக்கீலிடம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா சஸ்பெண்டு செய்யப்பட்டு 1 வருடத்துக்கும் மேல் ஆகி விட்டது. ஆனால் இதுவரை சபாநாயகர் இதில் தீர்வு காணவில்லை. இந்த பிரச்சினையில் சபாநாயகர் உடனே தீர்வுகாண வேண்டும்“ என்று உத்தர விட்டார்.