சிரியா: சர்வதேச தொழில் கண்காட்சி அருகே ராக்கெட் தாக்கி பலர் காயம்

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் பல்லாயிரம் மக்கள் கூடியிருந்த சர்வதேச தொழில் கண்காட்சி வளாகத்தின் அருகே இன்று ராக்கெட் தாக்கியதில் பலர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா: சர்வதேச தொழில் கண்காட்சி அருகே ராக்கெட் தாக்கி பலர் காயம்
Published on

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் கடந்த 1954-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் சர்வதேச வர்த்தக தொழில் கண்காட்சி நடப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கான ஆயுதப் புரட்சி நடந்து வருகிறது. அரசுப் படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

இதனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த சர்வதேச வர்த்தக தொழில் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. தற்போது, அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டு, போராளிகளின் கையும் ஓய்ந்துள்ளது. இது அரசுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும் நிலையில், 2011-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த ஆண்டு டமாஸ்கஸ் நகரில் மீண்டும் சர்வதேச தொழில் கண்காட்சியை நடத்த அரசு தீர்மானித்தது.

இந்த முடிவின்மூலம் சிரியாவில் அமைதி ஏற்பட்டு சகஜநிலை திரும்புவதாக சர்வதேச சமுதாயத்தை நம்பவைக்கும் முயற்சியாக கடந்த 17-ம் தேதி டமாஸ்கஸ் நகரில் இந்த கண்காட்சி தொடங்கியது. சிரியாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா இந்த கண்காட்சியில் பங்கேற்கவில்லை.

எனினும், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள சில நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு பின்னர் வரும் 27-ம் தேதிவரை நடைபெறும் இந்த கண்காட்சியை பல லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று கண்காட்சி தொடங்கிய சிறிது நேரத்தில் வாசல் பகுதியில் உள்ள அலங்கார வளைவின் அருகே மிகப்பெரிய ராக்கெட் ஒன்று பயங்கரமாக தாக்கியது. இதனால் ஏற்பட்ட தீ அலங்கார வளைவை தாண்டி வெகுதூரம் பரவியதாகவும், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும் சிரியாவின் பிரதான தொலைக்காட்சியான ‘சனா’ செய்திகள் மூலம் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com