அஞ்சுகிராமம் அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 13¾ பவுன் நகை கொள்ளை

அஞ்சுகிராமம் அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பூட்டை உடைத்து 13¾ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே மேட்டுக்குடியிருப்பு, ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் வேதமணி, வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உஷா (வயது 37). இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று உஷா வேலைக்கு சென்ற போது வீட்டை பூட்டிவிட்டு தனது இரண்டு மகன்களையும் நாகர்கோவிலில் உள்ள அக்கா வீட்டில் விட்டுவிட்டு சென்றார்.

நேற்று மதியம் வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு சென்ற போது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் வெளியே தூக்கி வீசப்பட்டிருந்தன. பீரோவில் இருந்த தங்க சங்கிலி, பிரேஸ்லெட், வளையல் என 13¾ பவுன் நகைகள், வெள்ளி கொடி போன்றவை கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 13¾ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com