

சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மேலகடையநல்லூர் மங்கம்மா சாலை இ.பி. காலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் சுந்தரமூர்த்தி (வயது 19), செங்கோட்டை கதிரவன் காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் சுடலை (19) மற்றும் கடையநல்லூர் இந்திரா காலனியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர்கள் கடந்த 29.5.2020 அன்று சிவகிரி குமாரபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த ராமுஅம்மாள் (70) என்ற மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி 4¾ பவுன் நகையை பறித்து உள்ளனர். மேலும் பல வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு உள்ளனர். அவ்வாறு கொள்ளையடித்த நகைகளை கடையநல்லூர் மாவடிக்கால் தந்தை பெரியார் நகரை சேர்ந்த நகைக்கடைக்காரர் சம்பத்கான் (53) என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் சிவகிரி போலீசார் கைது செய்தனர்.
அவர்களில் சம்பத்கானுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.