

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது.
இங்கு அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரன், பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்பட 59 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
ஆர்.கே.நகரில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால் தொகுதியில் உச்சக்கட்ட பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஓட்டு எந்திரங்கள் அனைத்தும் நாளை மறுநாள் அந்தந்த வாக்குச் சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தொகுதி தேர்தல் அதிகாரி பிரவீன்நாயர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து வருகின்றனர்.
ஆர்.கே.நகரில் பதிவாகும் வாக்குகளை வருகிற 24-ந்தேதி மெரீனா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதற்காக கல்லூரியின் முதல் மாடியில் தடுப்பு கம்புகள் இரும்பு வலைகள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. ஓட்டு எண்ணும் அறையில் மின் விளக்கு ஒலிபெருக்கி வசதி, ஜெனரேட்டர் வசதிகளும் செய்யப்படுகிறது.
ஓட்டு எண்ணும் இடத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.