

ராயபுரம்:
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குபதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவின் போது தேர்தல் பணியாளர்கள் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றிய முதல் கட்ட பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன் தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.
தொகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகள் அனைத்தும் பதட்டமானவை என்றும் அவர் கூறினார். எனவே அசம்பாவித சம்பவங்களை கண்காணிப்பதற்காக 200 இடங்களுக்கு மேல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கேமராக்கள் பொருத்தும் பணி இன்று தொடங்கியது. முதல் கட்டமாக முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மெயின் தெரு, தண்டையார் பேட்டை பவர்ஹவுஸ், கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ, புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ. கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இன்று ஒரே நாளில் மட்டும் 33 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றது. அடுத்த கட்டமாக மீதமுள்ள இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் ஆர்.கே.நகரில் அமைதியான நிலையில் தேர்தலை நடத்த முடியும் என்று நம்புவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொகுதி முழுவதும் 4 பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். 2 வீடியோ கேமராக்கள் அடங்கிய குழுவினரும் தொகுதியின் முக்கிய இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் சந்தேக நபர்கள் நடமாட்டத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.