ஆர்.கே.நகர் மக்களின் டாப் 10 பிரச்சனைகள்

ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு குடிநீர், போக்குவரத்து நெரிசல், டாஸ்மக் மதுக்கடை உள்ளிட்ட மிக மிக முக்கியமான 10 பிரச்சனைகள் உள்ளது.
ஆர்.கே.நகர் மக்களின் டாப் 10 பிரச்சனைகள்
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள மிக மிக முக்கியமான 10 பிரச்சனைகள் வருமாறு:-

1. குடிநீர் பிரச்சனை

ஆர்.கே.நகர் தொகுதியில் பெரும்பாலான இடங்களில் லாரிகள் மூலமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கொருக்குப்பேட்டை பகுதிக்குட்பட்ட மீனாம்பாள் நகர், அம்பேத்கர் நகர், அனந்த நாராயணபுரம், காமராஜ் நகர், பாரதி நகர், கோபால்ரெட்டி நகர், கருமாரியம்மன் நகர், தண்டையார் பேட்டை பகுதிக்குட்பட்ட சிவாஜி நகர், அஜிஸ் நகர், குமரன் நகர், ராஜீவ்காந்தி நகர், ராஜசேகர நகர், அன்னை இந்திரா நகர், பட்டேல் நகர், புது வண்ணாரப் பேட்டை பகுதிக்குட்பட்ட வாசி நகர், இளைய முதலி தெரு, வைத்தியநாதன் தெரு, பல்லவன் நகர், செழியன் நகர் ஆகிய இடங்களில் லாரிகள் மூலம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை. குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட குழாயை மாற்றி புதிய குடிநீர் குழாய் அமைத்து இங்கு குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.

2. போக்குவரத்து நெரிசல்

ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த முக்கிய பிரச்சனையாக போக்குவரத்து பிரச்சனை திகழ்கிறது. எண்ணூர் சாலை- நேரு நகர் சந்திப்பில் ரெயில்வே கேட் உள்ளது. சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ், மணலி, கொடுங்கையூர், தண்டையார் பேட்டை, ராயபுரம், பழைய வண்ணாரப் பேட்டை பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை இது. இந்த வழியாக பகல் நேரத்தில் அடிக்கடி சரக்கு ரெயில் செல்வதால் ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் இங்கு தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் மேம்பாலமோ அல்லது சுரங்கப் பாதையோ அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.

3. டாஸ்மாக் மதுக்கடை

டாஸ்மாக் மதுக்கடைகளால் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இங்கு முக்கிய பிரச்சனையாக இருப்பதும் இதுதான். பள்ளிக்கு செல்லும் மாணவிகள், கோவிலுக்கு செல்லும் பெண்கள் மதுக்கடைகளை தாண்டியே செல்ல வேண்டி இருக்கிறது. மது குடிப்பவர்கள் ஆங்காங்கே அலங்கோலமாக கிடப்பதும், பிரச்சனைகளும் இங்கு அடிக்கடி அரங்கேறும் காட்சிகள். எனவே இங்கு குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது இந்த தொகுதி பெண்களின் முக்கியமான கோரிக்கை.

4. மீனவர் பிரச்சனை

காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஆர்.கே.நகர் தொகுதிக்குள்ளேயே உள்ளது. இங்குள்ள மீனவ மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை பதப்படுத்தும் கிடங்குகள் இல்லை. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த துறைமுகத்தை நவீனப்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் மீன் பதப்படுத்தும் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பு.

5. பட்டா வழங்க வேண்டும்

ஆர்.கே.நகர் தொகுதியில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளுக்கு பட்டா இல்லாமலேயே வசித்து வருகிறார்கள். இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு பட்டா கிடைக்காமலேயே வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

6. வெள்ள பாதிப்பு

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பக்கிங்காம் கால்வாய் ஆற்றின் கரையோரம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். சென்னையில் உள்ள முக்கிய கால்வாய்களில் இதுவும் ஒன்றாகும். மழை காலங்களில் இந்த கால்வாய் வழியாக மழைநீர் கடலில் கலக்கிறது. இதன் நீர்வழித்தடம் தூர்ந்து போய் மேடாக மாறி வருகிறது. இதனால் மழை காலங்களில் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே இந்த கால்வாயை தூர்வாரி அதன் கரையை உயரப்படுத்த வேண்டும்.

7. மெட்ரோ ரெயில்வே பணி

தண்டையார்பேட்டை- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில்வே பாதை அமைக்கும் பணி மெதுவாக நடந்து வருகிறது. இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்குள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டிருப்பதால் நீண்டதூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் மெட்ரோ ரெயில் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

8. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வேலை பார்த்து வருகிறார்கள். தங்களுக்கு தொகுதிக்குள் வேலைவாய்ப்பு உருவாக்கி தரவேண்டும் என்பது இளைஞர்களின் கோரிக்கை.

9. பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்

ஆர்.கே.நகர் தொகுதியில் மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. தொழிற் பயிற்சி மையத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10. குடிசைமாற்று வாரிய வீடுகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. காசிமேடு, பவர்குப்பம், சேனியம்மன் கோவில் தெரு, கைலாச முதலி தெரு ஆகிய இடங்களில் குடிசை மாற்றுவாரியம் மூலம் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதை உடனடியாக உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com