

சென்னை:
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தபோது அங்குள்ள வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அதனை சரி செய்தனர். அதன்பிறகே அந்த எந்திரம் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்டது.
இதேபோல் வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ள எந்திரங்கள் சோதனைக்குப் பிறகே வாக்குப்பதிவுக்கு வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.