

ராயபுரம்:
ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. இன்று சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் நூதன முறையில் வித்தியாசமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்கிராக கிராமத்தை சேர்ந்த மணீதன் என்பவர் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு அவர் பின்னோக்கியே நடந்து வந்தார். வித்தியாசமான முறையில் மனுதாக்கல் செய்ய வந்த அவரிடம் நிருபர்கள் வயதை கேட்டனர். அதற்கு அவர் எனது வயது 2 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 668 நிமிடம் (48 வயது) என்றார். அவர் கடந்த 26 வருடமாக பின்னோக்கியே நடந்து வருகிறார்.
1991-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை அவர் யாரிடமும் பேசாமல் மவுனவிரதம் கடை பிடித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்காக அவர் கடந்த 2007-ம் ஆண்டு மவுன விரதத்தை கலைத்தார்.
அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகுதான் திருமணம் செய்வேன் என்கிறார். தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் கோவையை சேர்ந்த நூர்முகமது என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.
குதிரையில் அமர்ந்தபடி வலம் வந்த அவர் அதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கும் வந்தார். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் கோவையை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் டெங்கு கொசு போலவும், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை வேண்டுவது போலவும் வேடமணிந்தபடி குளுக்கோஸ் பாட்டிலை தூக்கியபடி நடித்துக் கொண்டே வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் தனலட்சுமியை மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுப்பி வைத்தனர்.