பீகார் கவர்னரின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம் - ராஷ்ட்ரீய ஜனதாதளம் அறிவிப்பு

ஆட்சி அமைக்க நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்த பீகார் கவர்னரின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் அறிவித்து உள்ளது.
பீகார் கவர்னரின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம் - ராஷ்ட்ரீய ஜனதாதளம் அறிவிப்பு
Published on

பாட்னா:

ஆட்சி அமைக்க நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்த பீகார் கவர்னரின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் அறிவித்து உள்ளது.

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்டு ஐக்கிய ஜனதாதளம் தலைவரான நிதிஷ்குமார் கடந்த 26-ந் தேதி திடீரென முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார். எனினும் மறுநாளே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் மாநில கவர்னர் (பொறுப்பு) திரிபாதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதை ஏற்றுக்கொண்டு கவர்னரும், நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து அவர் மீண்டும் மாநில முதல்-மந்திரி ஆனார். இதனால் அங்கு ஐக்கிய ஜனதாதளம், பா.ஜனதா கூட்டணி ஆட்சி ஏற்பட்டு உள்ளது.

இதற்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனோஜ் ஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில கவர்னர் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணியை ஆட்சியமைக்க அழைத்தது தவறு. இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறிய செயல் ஆகும்.

எஸ்.ஆர். பொம்மை வழக்கில் போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவின்றி ஒரு மந்திரி சபை ராஜினாமா செய்யும் பட்சத்தில், அடுத்து தனிப்பலம் கொண்ட கட்சியையோ அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையோ ஆய்வு செய்து ஆட்சி அமைப்பதற்கு அழைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே, கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து ஒருவாரத்துக்குள் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்.

மக்கள் அளித்த தீர்ப்பை நிதிஷ்குமார் திருடிவிட்டார். ஐக்கிய ஜனதாதளமும், பா.ஜனதாவும் செய்துள்ள அரசியல் சதியை மக்களிடம் விரிவாக எடுத்துரைப்போம்.

பீகாரில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலும் ஒருவித தீர்ப்பை வழங்கி இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், உயர்சாதி பிரிவினரில் ஒரு பகுதியினர் எங்களது மெகா கூட்டணிக்கு வாக்களித்தனர். இந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியதன் மூலம், மக்கள் அளித்த தீர்ப்பு கைவிடப்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் எதிர்ப்பை நிதிஷ்குமார் சந்திப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com