வாணியம்பாடி அருகே பழமையான பெரிய ஏரி உடையும் அபாயம் - 5 கிராம மக்கள் தவிப்பு

ஜவ்வாது ராமசமுத்திரம் பெரிய ஏரியில் உடைப்பு ஏற்பட்டால் ஜவ்வாது ராமசமுத்திரம், திம்மாம் பேட்டை, அலசந்தராபுரம் உள்ளிட்ட 5 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
தொடர் மழையால் நிரம்பிய ஜவ்வாது ராமசமுத்திரம் பெரிய ஏரி.
தொடர் மழையால் நிரம்பிய ஜவ்வாது ராமசமுத்திரம் பெரிய ஏரி.
Published on

வாணியம்பாடி:

ஆந்திரா அருகே தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் நாராயணபுர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஜவ்வாது ராமசமுத்திரம் என்ற பெரிய ஏரி உள்ளது. 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஏரி, வறட்சி காலங்களில் கூட வற்றாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஏரித் தண்ணீரை நம்பியே இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. தமிழக எல்லைப் பகுதியிலுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நிரம்பி வருகிறது.

இதில், ஜவ்வாது ராமசமுத்திரம் பெரிய ஏரி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரியிலிருந்து தற்போது அதிகமாக உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏரியின் மதகுப் பகுதிக்கு அருகே பெரிய ஓட்டை விழுந்து, அதிலிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதால், ஏரிக்கரை உடையும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஜவ்வாது ராமசமுத்திரம் பெரிய ஏரியில் உடைப்பு ஏற்பட்டால் ஜவ்வாது ராமசமுத்திரம், திம்மாம் பேட்டை, அலசந்தராபுரம் உள்ளிட்ட 5 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இந்த 5 கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, பெரிய ஏரி உடைந்தால் பேராபத்து உள்ளது.

இதனையடுத்து, 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டை மற்றும் பாறாங்கற்களை போட்டு ஏரிக்கரையை தற்காலிகமாக பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com