கம்பம் - கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தல் நாளுக்கு நாள் அதிகரிப்பு

கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கம்பம் - கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தல் நாளுக்கு நாள் அதிகரிப்பு
Published on

கூடலூர்:

கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி அதிகளவில் கடத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி மாநில எல்லைகளான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் உணவுப்பொருள் தடுப்பு போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டதால் அரிசி கடத்தல் பெருமளவு குறைந்தது.

தற்போது போலீசார் அலட்சியமாக உள்ளதால் மீண்டும் அரிசி கடத்தல் அதிகமாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மூலம் ஜீப்களில் அரிசி கடத்தி வந்தனர். இவர்கள் அடிக்கடி பிடிபட்டதால் தற்போது அரசு பஸ்களில் ரேசன் அரிசி மூட்டையை வைத்துவிட்டு வேறு இருக்கையில் உட்கார்ந்து கொள்கின்றனர். எப்போதாவது போலீசார் அதனை கண்டுபிடித்தால் யாரும் உரிமை கோர மாட்டார்கள். இதனால் அரிசி மட்டும் பிடிபடும். கடத்தியவர்கள் தப்பி விடுவார்கள்.

தற்போது 3 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் முறையாக ஈடுபடுவதில்லை. இறைச்சி மாடுகள் கொண்டு செல்வோரிடம் கணிசமான தொகை வாங்கிக்கொண்டு மற்ற வாகனங்களை சோதனையிடுவதில்லை. இதனால் கம்பம், கூடலூர், சின்னமனூர், காமயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கிக்கொண்டு அதனை கேரள மாநிலம் குமுளி, கட்டப்பணை, வண்டிபெரியாறு, புளியமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர்.

போலீசாருக்கு வாகனம் இருந்தும் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் ஒரேநாளில் 2 முதல் 3 முறை ரேசன் அரிசியை தைரியமாக கடத்திச்செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல் கஞ்சா, எரிசாராயம் ஆகியனவும் கடத்தப்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் மீண்டும் ஈடுபட்டு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com