ஒருவரை நேசிப்பது குற்றமல்ல... சுஷாந்த் மரண வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள தயாராகும் ரியா

விசாரணையின்போது, அதிகாரிகளின் கேள்விகளுக்கு ரியா திருப்திகரமான பதில்களை வழங்காவிட்டால் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ரியா சக்கரவர்த்தி
ரியா சக்கரவர்த்தி
Published on

மும்பை:

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் (என்சிபி) ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். ரியாவின் சகோதரர் ஷோயிக், மற்றும் சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டு என்சிபி காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொண்ட குழு மற்றும் போலீசார் இன்று காலை ரியாவின் வீட்டுக்குச் சென்று, விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி சம்மன் அளித்துவிட்டு திரும்பினர். அதன்படி ரியா தனது வழக்கறிஞருடன் விசாரணைக்கு ஆஜராவதற்காக புறப்பட்டுச் சென்றார். 

இந்த விசாரணை குறித்து ரியா கூறுகையில், ‘ஒருவரை நேசிப்பது குற்றம் அல்ல. காதலுக்காக விளைவுகளை நான் எதிர்கொள்வேன். நிரபராதி என்பதால் நான் முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகவில்லை’ என்றார்.

என்சிபி அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையின்போது, அதிகாரிகளின் கேள்விகளுக்கு ரியா திருப்திகரமான பதில்களை வழங்க முடியாவிட்டால், அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. 

ரியாவிடம் நடத்தப்படும் விசாரணை மற்றும் அவரது வாக்குமூலம் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படலாம். இது ஒரு சூனிய வேட்டை என்பதால் ரியா கைதாவதற்கு தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com