

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள் இன்று அவரை கைது செய்தனர். கைது செய்த பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
ரியா சக்ரபோர்த்தியை நீதிபதி முன் ஆஜர்படுத்த இருக்கிறார்கள். இதுகுறித்து தென்மேற்கு மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை டிஜி முத்தா அசோக் ஜெயின் கூறுகையில் ‘‘ரியா சக்ரபோர்த்தியை நீதிபதி முன் ஆஜர்படுத்த இருக்கிறோம். அவரை எங்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை. ஆனால், நீதிமன்ற காவலுக்கு வலியுறுத்துவோம். எல்லாவித கேள்விகளும் கேட்கப்பட்டதால், நாங்கள் காவிலில் எடுத்து விசாரிக்க வலியுறத்தமாட்டோம்.
ஆனால், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிப்போம். அவருக்கு நீதிமன்ற காவல் அளிக்க வற்புறுத்துவோம். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. அவரை கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரிடம் இருந்து சட்டவிரோதமான எந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை’’ என்றார்.