கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம்

கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம்
Published on

கூடலூர்:

நீலகிரி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிவாசி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறவும் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கூடலூர் தாலுகா பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய் துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கூடலூர் அருகே செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது வருவாய் துறையினருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டங்கள் அமைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் மகேந்திரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் சித்தராஜ், வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் ஸ்வேதா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று செருமுள்ளி புழம்பட்டியில் அரசு நிலம் 1 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்காக அப்பகுதியில் பயிரிட்டு இருந்த தேயிலை செடிகளை வெட்டினர். பின்னர் மீட்கப்பட்ட 1 ஏக்கர் அரசு நிலத்தை பழங்குடியினர் நலத்துறை வசம் ஒப்படைத்தனர்.

இது குறித்து வருவாய் துறையினர் கூறும்போது, ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க அரசு நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் 1 ஏக்கர் மட்டும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது, என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com