

பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள தின்னகுட்லானஅள்ளி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமமக்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்லும் பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் வயது முதிர்வு காரணமாக இறந்தார். இதையடுத்து கிராமமக்கள் இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்து சென்றனர்.
அப்போது அதேபகுதியை சேர்ந்த ஒருவர் மயானத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்து தடை செய்ததாக தெரிகிறது. அவர் முதியவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்திற்கும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், தாசில்தார் ராஜா மற்றும் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து சமரசம் செய்தனர். அதன் பின்னர் இறந்த முதியவரின் உடலை கிராமமக்கள் எடுத்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.