குடியிருப்பு பகுதியில் நிலக்கரி சாம்பல் கொட்ட எதிர்ப்பு - லாரிகளை சிறைபிடித்து மறியல்

மீஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதியில் நிலக்கரி சாம்பல் கொட்ட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து மறியல் செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த கொண்டகரை ஊராட்சிக்கு உட்பட்ட குருவி மேடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வல்லூர் அனல் மின்நிலையத்தில் இருந்து கொண்டு வரப்படும் நிலக்கரி சாம்பல் கழிவுகள் கொட்டி வைக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் நிலக்கரி சாம்பல் கம்பெனிகளுக்கும், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும், செங்கல் சூளைகளுக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது.

இதனால் சாம்பல் கழிவுகளின் தூசுகள் அங்குள்ள வீடுகள் முழுவதும் பரவி காணப்படுகிறது. தண்ணீரின் நிறமும் மாறுகிறது. அதிக அளவு லாரிகள் செல்வதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

சாம்பல் கழிவின் பாதிப்பால் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இது பற்றி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை வல்லூர்-குருவி மேடு சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com