

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரதரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ஆர். விளையாட்டு வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும், தேசியக் கொடியின் நிறங்களில் பலூன்களையும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியார் பறக்க விட்டனர்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் 15 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 9 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் பதக்கங்களையும், 25 காவலர்களுக்கு மெச்சத்தக்க சேவை சான்றிதழ்களையும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். அதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் போரில் உயிரிழந்தவர் குடும்பத்தின் வருடாந்திர பராமரிப்பு மானியமாக ரூ.25,000, வேளாண்மைத்துறையின் சார்பில் 12 நபர்களுக்கு ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வேளாண் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்டங்ளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 2 நபர்களுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான நலத் திட்டங்களையும், கூட்டுறவுத் துறையின் மூலம் 108 பயனாளிகளுக்கு ரூ.28.50 லட்சம் மதி பிலான கடனுதவிகளையும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.86 லட்சம் மதிப்பிலான நலத் திட்டங்களையும், வருவாய்த்துறையின் சார்பில் திருமண நிதியுதவி, இலவச வீட்டு மனைப்பட்டா, இயற்கை மரண நிதியுதவி என பல்வேறு திட்டங்களின் கீழ் 79 பயனாளிகளுக்கு 18.53 லட்சம் மதிப்பிலுமான நலத் திட்டங்களையும், தாட்கோ மூலம் 4 நபர்களுக்கு ரூ.28.26 லட்சம் மதிப்பிலும் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 258 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 17 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
விழாவில் மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, களரம்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளி, கெளதமபுத்தர் உயர் நிலைப்பள்ளி, புனித டோம்னிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச்சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews