டெல்லி குடியரசு தின விழா: நான்காவது வரிசையில் இருந்து ஆறாவது வரிசைக்கு தூக்கியடிக்கப்பட்ட ராகுல் காந்தி

டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற ராகுல்காந்தி ஆறாவது வரிசையில் அமர வைக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
டெல்லி குடியரசு தின விழா: நான்காவது வரிசையில் இருந்து ஆறாவது வரிசைக்கு தூக்கியடிக்கப்பட்ட ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் 69-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஏசியான் அமைப்பை சேர்ந்த பத்து நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மிக முக்கிய நபர்களுக்கான இருக்கைகள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 4-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. அதே சமயம் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர்.

பொதுவாக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படுவது தான் வழக்கம். கடந்த ஆட்சியில் பா.ஜ.க. தலைவர் அத்வானிக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது என காங்கிரஸ் கட்சியினர் நேற்று தெரிவித்தனர். 

இன்று காலை குடியரசு தின விழாவில் பங்கேற்க சென்ற ராகுல் காந்திக்கு ஆறாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் அருகே அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை ராகுல் பார்த்தார். கடந்த ஆண்டு குடியரசு தின அணி வகுப்பின்போது அமித் ஷாவின் அருகில் முதல் வரிசையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெல்லி குடியரசு தின விழாவில் இன்று பங்கேற்ற ராகுல்காந்தி நான்காவது வரிசையில் இருந்து ஆறாவது வரிசையில் மாற்றி அமர வைக்கப்பட்டதால் காங்கிரசார் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத்துறை பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டனத்தில், ‘ஆரம்பத்தில் நான்காம் வரிசையை ஒதுக்கிய அராஜக ஆட்சியாளர்கள் அனைத்து மரபுகளையும் புறந்தள்ளிவிட்டு காங்கிரஸ் தலைவரை இன்று ஆறாவது வரிசையில் அமர வைத்ததன் மூலம் மோடி அரசின் மலிவான அரசியலை நாம் அனைவரும் பார்க்கலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

நம்மை பொருத்தவரை குடியரசு தின விழா கொண்டாட்டம்தான் மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். #RepublicDayParade #RahulGandhi #6throwseat

X

Maalai Malar
www.maalaimalar.com