ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும், முன்னர் இருந்த 5.15% ஆகவே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
Published on

மும்பை:

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ)  மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

அவ்வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே இருந்த 5.15 சதவீத வட்டி விகிதம் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கிக்கு மற்ற வங்கிகள் அளிக்கும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த முறை நடந்த ஆய்வு கூட்டத்தில் ரெப்போ விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் ரெப்போ விகிதம் தொடர்ந்து 5 முறை (1.35 சதவீதம்) அளவில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு மற்றும் வாகன கடன்களின் வட்டியில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com