திருந்தி வாழ ஆசைப்பட்டவர்களை போலீஸ் படுகொலை செய்துவிட்டனர் - ரவுடிகளின் உறவினர்கள்

திருந்தி வாழ ஆசைப்பட்டு வீட்டுக்கு வந்தவர்களை போலீசார் திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டனர் என்று ரவுடிகளின் உறவினர்கள் கூறினர்.
திருந்தி வாழ ஆசைப்பட்டவர்களை போலீஸ் படுகொலை செய்துவிட்டனர் - ரவுடிகளின் உறவினர்கள்
Published on

பேரையூர்:

மதுரை சிக்கந்தர் சாவடியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

உடலை பெறுவதற்காக 2 பேரின் உறவினர்களும் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர். பாதுகாப்புக்காக போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்து இருளாண்டியின் தந்தை இருளாண்டி கூறியதாவது:-

‘எனது மகன் முத்து இருளாண்டிக்கு, முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது எனது மருமகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

முத்து இருளாண்டி மீது பல வழக்குகள் உள்ளன. அவர் போலீசில் சரண் அடைந்து திருந்தி வாழ நினைத்தார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை கொன்று விட்டனர். என்றார்.

முத்து இருளாண்டியின் அண்ணன் ராஜா என்பவர் கூறுகையில், போலீசார் திட்டமிட்டே என்கவுண்டர் செய்துள்ளனர். நேற்று முன்தினமே எனது வீட்டுக்கு வந்த போலீசார் என்னை மிரட்டி முத்து இருளாண்டி எங்கே? என்று கேட்டனர். உண்மையை கூறாவிட்டால் பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டினர்.

நேற்று முன்தினம் இரவே முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக்கை போலீசார் பிடித்துச் சென்று விட்டனர். பின்னர் அவர்கள் நாடகமாடி சிக்கந்தர் சாவடியில் வைத்து என்கவுண்டர் செய்துள்ளனர். இது திட்டமிட்ட கொலை என்றார்.

முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரை செல்வி கூறுகையில், எனது தம்பி திருந்தி வாழ ஆசைப்பட்டார். ஆனால் அதற்குள் போலீசார் தம்பியை கொன்று விட்டனர். இது குறித்த தகவலை கூட போலீசார் எங்களுக்கு சொல்லவில்லை. உடலை பார்க்க நேற்று மாலை வரை காத்திருந்தோம். இதுவரை போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com