

தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் நேற்று மாலை தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிப்பதற்காக தமிழக அரசு, ஒரு நபர் கமிஷன் என்ற பெயரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனத்தை திரும்ப பெற வேண்டும். அதற்கு மாற்றாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, பரந்தாமன் ஆகியோரில் ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.
துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு மாற்றாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களின் லட்சியமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு, இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான தமிழக அரசு ஆட்சி பொறுப்பில் இருந்து விலக வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை குற்றத்திற்கான சதித்திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
எனவே அரசும், ஆலை நிர்வாகமும் மக்களின் விருப்பம் என்னவென்று அறிய வேண்டும். அதாவது ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா?, மூடப்பட வேண்டுமா? என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.