

புதுச்சேரி:
ரெட்டியார்பாளையம் புதுநகர் ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் ஜான்பியர் (வயது 36). சென்டரிங் தொழிலாளி. இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
ஜான்பியருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.
அதுபோல் நேற்றும் வேலைக்கு செல்லாமல் ஜான்பியர் மது குடிக்க மனைவி காயத்ரியிடம் பணம் கேட்டார்.
ஆனால், காயத்ரி பணம் கொடுக்க மறுத்து விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த ஜான்பியர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் அவர் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கினார்.
வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய காயத்ரி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜான்பியர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.