

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதால் திருப்பதியில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியும், இலங்கையைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகளும் கடந்த 22-ந் தேதி ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் முக்கிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில், சித்தூர் அருகில் உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உள்ளிட்டவற்றுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
இதனால் காணிப்பாக்கம் விநாயகர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனை சாவடியில் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருப்பதி கோவிலை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது:-
திருமலைக்கு கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்து வருகிறது. இதனால் திருமலையில் 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையம் ரெட் அலர்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புப் படை பிரிவுகள் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார்.
திருப்பதி பிரமோற்சவ விழா கருட சேவைக்காக சென்னையில் இருந்து குடை ஊர்வலமாக கொண்டு வரப்படும். இதனை சீர்குலைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புத்தூரில் பயங்கரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தனர்.
இதனை கண்காணித்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 4 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பிடித்தனர். இப்போது அதேபோல் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா? என்ற சோதனை புத்தூரில் தீவிரமாக நடந்து வருகிறது.
அங்குள்ள தெருக்கள் மற்றும் முக்கிய வீதிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது சுற்றிதிரிந்தாலோ அல்லது வீடுகளில் தங்கியிருந்தாலோ போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கும்படி பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இதே போல் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு வரும் வழிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வரும் வழிகளில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.