வாராக்கடன் வசூலில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள்

வாராக்கடன் வசூலில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்து உள்ளது. கடனை திருப்பிச்செலுத்தவில்லை என்றால் 6 மாதத்தில் வங்கிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
வாராக்கடன் வசூலில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள்
Published on

புதுடெல்லி:

வாராக்கடன் வசூலில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்து உள்ளது. கடனை திருப்பிச்செலுத்தவில்லை என்றால் 6 மாதத்தில் வங்கிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

விஜய் மல்லையா போன்ற பெரும் தொழில் அதிபர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிச்செலுத்தாமல் ஏய்த்து விடுகின்றனர். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளில் ரூ.7 லட்சத்து 33 ஆயிரத்து 974 கோடியும், தனியார் துறை வங்கிகளில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 808 கோடியும் வாராக்கடன்களாக உள்ளன. இப்படி குவிந்து உள்ள வாராக்கடன்களை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியது.

வாராக்கடன் வசூலில் வங்கிகளுக்கான பொதுவான விதிமுறைகளை ரிசர்வ் வங்கிதான் வகுத்து, அளித்து வந்தது. அப்படி அமல்படுத்தி இருந்த 6 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று முன்தினம் இரவு ரத்து செய்து விட்டது.

வாராக்கடன்களை வசூலிப்பதில் ரிசர்வ் வங்கி இதுவரை இருந்து வந்த ஒத்திசைவான மற்றும் எளிமையான கட்டமைப்பை முழுமையாக மாற்றி, கடுமையான வழிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.

அந்த வகையில், ரூ.2 ஆயிரம் கோடி அல்லது அதற்கு மேற்பட்ட கடன் களில், கடனை திருப்பிச்செலுத்தாவிட்டால், அதைத் தீர்ப்பதற்கான திட்டத்தை 180 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் அல்லது திவால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்படி வங்கிகள் செயல்படாவிட்டால், வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். ரூ.5 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச்செலுத்தாதவர்கள் பற்றி வாரம்தோறும் ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் அறிக்கை அளிக்க வேண்டும். புதிய விதிமுறையின்படி கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பிச்செலுத்தாவிட்டால், 180 நாட்களுக்குள் அதற்கு தீர்வு கண்டு விட வேண்டும். தவறினால், அதை 15 நாட்களுக்குள் ஐ.பி.சி. என்னும் திவால் நிலைக்கு கொண்டு வந்து விட வேண்டும்.

வங்கிகளில் கடன் வாங்கி விட்டு பணத்தை திருப்பி செலுத்தாதவர்கள் விழித்துக்கொள்வதற்கு இது எச்சரிக்கை மணியாக அமைந்து உள்ளது என மத்திய நிதிச்சேவைகள் செயலாளர் ராஜீவ் குமார் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com