ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அமைச்சர்கள் பார்த்தார்களா?: ஆர்.பி.உதயகுமார் பதில்
சென்னை:
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவரை பார்த்ததாகவும், பார்க்கவில்லை என்றும் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அமைச்சர்கள் பார்த்தார்களா? நீங்கள் பார்த்தீர்களா?
பதில்:- ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே விசாரணை நிறைவடையும் வரையிலும் எந்த கருத்தையும் நான் கூற முடியாது. அமைச்சர்கள் சொல்வது, அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. அதற்கான விளக்கத்தை என்னிடம் கேட்டால், விசாரணை கமிஷனில் தெரிவிப்பேன்.
கேள்வி:- அமைச்சர் செங்கோட்டையனை தான் முதல்-அமைச்சராக ஆக்க வேண்டும் என்று சசிகலா கூறியதாகவும், எடப்பாடி பழனிசாமியை தான் முதல்-அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் உறுதியாக இருந்தார் என்றும் தீபக் கருத்து தெரிவித்திருக்கிறாரே?
பதில்:- தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சிறப்பான ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. அவர் வந்திருக்கலாம், இவர் வந்திருக்கலாம் என்று இப்போது கூறுவது அவரது சொந்த கருத்து ஆகும். ஜெயலலிதாவின் அரசில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் எனும் அடிப்படையில் தான், ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, 45 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரராக இருக்கிற, தொடர்ந்து ஜெயலலிதாவின் விசுவாசியாக இருக்கிற எடப்பாடி பழனிசாமி அடையாளம் காட்டப்பட்டு, எல்லோராலும் ஏகமனதாக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது.
கேள்வி:- சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும் துடித்தார் என்று தீபக் கூறியிருக்கிறாரே?
பதில்:- அவரது அனுபவத்தில், அவருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கிறார். கருத்துகள் எல்லாம் சட்டமாகி விடாது. எடப்பாடி பழனிசாமி சட்டரீதியாக முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சட்டசபையிலும் அவரது பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி சட்ட ரீதியான முதல்-அமைச்சர் தான். அவரை மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

