தினகரனின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும்: அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு

தினகரனின் அறிவிப்பு நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் நகைப்புக்குரியதாகவும் உள்ளது என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் கூறி உள்ளனர்.
தினகரனின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும்: அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு
Published on

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை அ.தி.மு.க. அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை அதிரடியாக வெளியிட்டார்.

தினகரன் அறிவிப்புக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. அம்மா அணி துணைப்பொதுச் செயலாளர் என்ற பெயரில் 18 அமைப்புச்செயலாளர்கள் மற்றும் அம்மா பேரவைக்கு 8 இணை மற்றும் துணைச் செயலாளர்களை டி.டி.வி. தினகரன் அறிவித்திருக்கிறார். இந்த நடைமுறை இதுவரை நாங்கள் பார்த்திராத ஒன்று.

நான் அம்மா பேரவை செயலாளராக பணியாற்றி வருகிறேன். நிர்வாகிகள் நியமனம் என்பது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது பட்டியல் வரும். அதிலே அந்த அணி செயலாளர்களின் பரிந்துரை கடிதங்களை பெற்று சிறப்பாக பணியாற்றுகின்ற நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தரலாம் என்று நாங்கள் பரிந்துரைப்போம். அதை அம்மா அவர்களும் விசாரித்து புதிய நிர்வாகிகளை அறிவிப்பார்கள்.

அது கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வலுவான அடித்தளமாக இருக்கும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் திறமையானவர்கள் தான். கட்சிக்காக உழைத்தவர்கள்தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் அறிவிக்கப்பட்ட முறைதான் தவறானது. நன்றாக செயல்படுகின்ற நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் நகைப்புக்குரியதாகவும் இந்த அறிவிப்பு உள்ளது. பதவி என்பதை கேலிக்கூத்தாக்கி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் முறைப்படி பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோரை இன்னும் அங்கீகரிக்கவில்லை. அ.தி.மு.க. நிர்வாகி கள் யார்-யார் என்பது கூட விசாரணையில் இருக்கிறது என்று தேர்தல் ஆணையமே 2 நாட்களுக்கு முன்னர் பதில் சொல்லி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் புதிய நிர்வாகிகள் நியமனம் யாரை முன்னிலைப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது. இது கட்சி வளர்ச்சிக்கு ஒரு போதும் உதவாது. புதிய நிர்வாகிகள் பட்டியலில் உள்ளவர்கள் கட்சிக்காக உழைத்தவர்கள்தான். தியாகம் செய்தவர்கள்தான். ஆனால் ஏ.கே.போஸ், சத்யா, பழனி போன்றவர்கள் பொறுப்புகளை ஏற்க மறுத்து விட்டனர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. இயக்கத்தில் கிளை செயலாளர் பதவியைக் கூட ஒருவர் மறுத்ததாக இதுவரை வரலாறு இல்லை. அ.தி.மு.க.வில் நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சி பத்திரிகையில் பக்கம் பக்கமாக வாழ்த்து விளம்பரம் வரும். நிர்வாகிகள் அணிதிரண்டு வந்து சால்வை அணிவித்து வாழ்த்துவார்கள். ஆனால் அந்த நிலைமை இன்றைக்கு இல்லை. அதனால் இந்த அறிவிப்பில் யாருக்கும் உடன்பாடு இல்லை என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகள் அறிவிப்பு அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் அம்மா பேரவை சிறப்பாக செயல்படுவதற்காகவா? அல்லது சிறப்பாக செயல்படும் பேரவையை முடக்குவதற்காகவா? என்ற கேள்வி தான் எழுந்துள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆகியவற்றை அம்மா பேரவை சார்பில் ஒரு லட்சம் இளைஞர்களை திரட்டி நடத்தினோம். அரசு சார்பிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டங்கள் தோறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு எப்படி உதவிகரமாக இருக்க முடியும்? நன்றாக செயல்பட்டு வருகின்ற ஆட்சியிலும், கட்சியிலும் குழப்பத்தையே இது ஏற்படுத்தும். மேலும் நிர்வாகிகள் செயல்பாட்டை முடக்கிபோடுகின்ற நிகழ்வாகவே இதுபோன்ற அறிவிப்புகள் ஏற்படுத்தும். தனிநபர்களை முன்னிலைபடுத்த அறிவிக்கப்படும் அறிவிப்பாகவே இருக்கும்.

பதவி கொடுப்பதில் சரியான நடைமுறைகளை பின்பற்றி அறிவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாத, கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளாத, பொதுமக்கள் எள்ளி நகையாடுகின்ற நிலையை தான் இந்த அறிவிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை எப்படி கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவாக எடுத்துக்கொள்ள முடியும். கட்சி, சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வந்தபின்னர்தான் புதிய நிர்வாகிகளை நியமிக்க முடியும் என்று 1½ கோடி தொண்டனுக்கும் தெரியும். ஆனால் நம்மை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில் தற்போது பொறுப்பு அறிவிப்பதற்கு எந்த தேவையும் ஏற்படவில்லை.

ஆட்சியையும், கட்சியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால் இதுபோன்ற அறிவிப்புகள் நன்றாக செயல்படுகின்ற கட்சியிலும், ஆட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தவும், மக்கள் எள்ளிநகையாடவும் உதவும். தேர்தல் ஆணையமும் இந்த புதிய நிர்வாகிகளை அங்கீகரிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com