ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பட்டணம் முனியப்பம் பாளையம் ஊராட்சி. இங்குள்ள குடித்தெரு, மலைவாழ் மக்கள் தெரு, ஆதிதிராவிடர் தெரு மற்றும் அம்மன் கார்டன் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறி அந்த கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி(31), மோகன் ராஜ்(32), மனோகரன்(40), சரவணன்(20), மணி(25) என 5 பேர் அங்குள்ள பி.எஸ்.என்.எல் தொலைப்பேசி நிலையத்தில் உள்ள சுமார் 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 8.15 மணியளவில் செல்போன் டவரில் ஏறிய அவர்கள் சுமார் 60 அடி உயரத்தில் நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அம்மன் கார்டன் பகுதிக்கு கடந்த ஒரு வருடமாக உப்பு தண்ணீர் மற்றும் குடி தண்ணீர் வரவில்லை எனவும், குடித்தெரு , மலைவாழ்மக்கள் தெரு, ஆதிதிராவிடர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 மாதமாக தண்ணீர் வரவில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டினர். மேலும் ஊராட்சி செயலாளர் பச்சமுத்துவை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த போராட்டத்தின் போது பட்டணம் முனியப்பம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தண்ணீர் கேட்டு பி.எஸ்.என்.எல் தொலைப்பேசி நிலையத்தில் திரண்டனர்.
தகவல் அறிந்த ராசிபுரம் தாசில்தார் சாகுல் ஹமீது, துணை வட்டார வளர்ச்சி அதிகாரி லோகநாயகி மற்றும் நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்து 10 மணிக்கு மேல் வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி ராதா கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து 10.15 மணியளவில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை ஏற்று செல்போன் டவரின் மீது இருந்த 5 பேரும் கீழே இறங்கி வந்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி கூறியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டம் காரணமாக பட்டணம் முனியப்பம் பாளையம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.