

உத்தரப்பிரதேசம் மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை கற்பழித்து விட்டதாக ஒரு இளம்பெண் போலீசில் புகார் அளித்திருந்தார்.
கற்பழிப்பு புகாரை வாபஸ் பெறும்படி வற்புறுத்தி அந்த பெண்ணின் தந்தையை எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் கொடூரமாக தாக்கியதாக மற்றொரு புகாரும் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஒரு பழைய வழக்கு தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை பப்பு என்னும் சுரேந்திரா சிங்கை கடந்த 5-ம் தேதி கைது செய்த போலீசார் உன்னாவ் மாவட்ட சிறையில் அடைத்தனர். ஆனால், கற்பழிப்பு புகாரின்மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது குடும்பத்தாருடன் நேற்று லக்னோ நகருக்கு வந்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேந்திரா சிங்குக்கு உரிய சிகிச்சை அளிக்க அனுமதிக்காமல் எம்.எல்.ஏ. தடுத்து வருவதாக நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்-தை சந்தித்து தனக்கு ஏற்பட்ட கொடுமையை கூற பாதுகாவலர்கள் அனுமதிக்காததால் முதல்வர் வீட்டின் அருகே அவர் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், உன்னாவ் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேந்திரா சிங்கின் உடல்நிலை நேற்றிரவு திடீரென்று மோசம் அடைந்ததால் உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.